×

2023-24ம் ஆண்டை விட நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக குறைவு : தங்கம் தென்னரசு தகவல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், அந்த திட்டத்திற்கான முழு செலவையும் மாநில அரசு தனது நிதியிலிருந்து ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசிற்கு நடப்பு ஆண்டில் ரூ.9 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஏற்பட்ட இரண்டு தொடர் பேரிடர்கள் ஏற்படுத்திய பாதிப்பு, இந்த சூழ்நிலையை மேலும் மோசமடைய செய்தன. இதன் காரணமாக மாநிலத்தின் நிதி நிலைமையை கடுமையாக பாதித்துள்ளது.

2024-25ம் ஆண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மதிப்பீடுகள் 14.71 சதவீதம் வளர்ச்சியுடன் ரூ.1,95,173 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், ஜி.எஸ்.டி வரி இழப்பீடு முற்றிலும் நின்றுவிடும் என்பதால் 2023-24ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது, 2024-25ம் ஆண்டில் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் குறைத்து ரூ.23,354 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஒதுக்கீடுகளின் அடிப்படையில் 2024-25ம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்ட மதிப்பீடுகளில் ஒன்றிய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு ரூ.49,755 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மொத்தவருவாய் செலவினம் ரூ.3,48,289 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீடுகள் நீங்கலாக, வருவாய் பற்றாக்குறை ரூ.34,837 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் மூலதன செலவினம் ரூ.47,681 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டிற்கான திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடும் போது 12.11 சதவீத வளர்ச்சி கொண்டதாகும். இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான செலவினம் ரூ.9 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.12 ஆயிரம் கோடி அதிகரித்ததன் காரணமாக நிகர கடன்கள் மற்றும் முன் பணங்கள் ரூ.11,733 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில், நிதிப்பற்றாக்குறை ரூ.1,08,690 கோடி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதமாகும். அதன்படி, ‘‘15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காமல் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் சீரிய நிதி நிர்வாக மேலாண்மையை அரசு கடைப்பிடித்து 2022-23ம் ஆண்டில் 3.46 சதவீதமாக இருந்த நிதிப்பற்றாக்குறையை 2023-24ம் ஆண்டில் 3.45 சதவீதமாகவும், 2024-25ம் ஆண்டில் 3.44 சதவீதமாகவும் குறைத்துள்ளது. மாநிலத்தின் வரவு – செலவு திட்ட வருவாய் ஆதாரங்களில் இருந்தே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு இழப்பீட்டு நிதி வழங்கிய பின்பும் பேரிடர்களால் கடும் பாதிப்பை சந்தித்த போதிலும் நிதிப்பற்றாக்குறையை குறைத்து இந்த அரசு சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 2023-24ம் ஆண்டை விட நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக குறைவு : தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Gold South Government ,Tamil Nadu Legislative Assembly ,Finance Minister ,Thangam Thannarasu ,Union Government ,Chennai Metro Rail ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...